பங்களாவில் உல்லாசம்; மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை - பகீர் பின்னணி!
மாணவர்கள், ஐடி ஊழியர்களைக் குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை
சென்னை பீர்க்கன்காரணை ஏரிக்கரை பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது, அங்குள்ள சுடுகாட்டில் சிலர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர்.
உடனே அவர்களிடம் விசாரித்ததில், தேவநேச நகர்ப் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (21), சாமுவேல் (24), முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (25) ஆகியோர் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், மும்பையில் இருந்து சட்ட விரோதமாக கடத்திவந்த 1,200 போதை மாத்திரைகள். அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மூவர் கைது
பின் விசாரணையில், கஞ்சா விற்பனையில் இரட்டிப்பு லாபம் கிடைப்பதால் வெளி மாநிலங்களுக்குச் சென்று உயர் ரக கஞ்சா, போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்து வரும் பணத்தில் மூன்று பேரும் ஈ.சி.ஆர்-இல் உள்ள ரிசார்டுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
குறிப்பாகத் தாம்பரம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, வண்டலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஐ.டி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியவர்களுக்கு மட்டும் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மூவரையும் கைது செய்துள்ளனர்.