காதலி உட்பட 5 பேர் கொடூரக் கொலை; 23 வயது இளைஞர் வெறிச்செயல் - நாட்டை உலுக்கிய சம்பவம்!
23 வயது இளைஞர், காதலி உட்பட 5 பேரைக் கொன்ற சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.
5 பேர் கொலை
கேரளா, பேருமலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி ஷெமி. இவர்களுக்கு அஃபான் (23) மற்றும் அப்சான் (15) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், அஃபான் வெஞ்ஞாரமூடு காவல் நிலையத்திற்கு வந்து, தான் தன்னுடைய தாய், தம்பி, தந்தையின் சகோதரர், அவருடைய மனைவி, பாட்டி மற்றும் காதலி ஆகிய 6 பேரை கொலை செய்ததாகக் கூறி சரணடைந்துள்ளார். உடனே அவரை கைது செய்த போலீஸார், கொலை செய்ததாகக் கூறப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.
அங்கு, 6 பேரை கொடூரமாகத் தாக்கப்பட்டு, 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. பின் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், வேலைக்காக துபாய் சென்ற அஃபான் அங்கு வேலை கிடைக்காததால் சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார்.
இளைஞர் வெறிச்செயல்
தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த பர்சானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலி பர்சானாவை உறவினர்கள் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம்போல், காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது தன்னுடைய தாய் ஷெமி, தம்பி அப்சான் மற்றும் காதலி பர்சானாவை சுத்தியால் சரமாரியாக அடித்துள்ளார்.
இதனையடுத்து அருகில் உள்ள பாங்கோடு என்ற இடத்தில் வசிக்கும் தன்னுடைய பாட்டி சல்மா பீவியை (88) சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். அதன் பின்அருகில் உள்ள சுள்ளால் பகுதிக்கு வந்து தன்னுடைய பெரியப்பா லத்தீப் (63) மற்றும் அவரது மனைவி ஷாகினா (53) ஆகியோரையும் சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதில் தாய் ஷெமி தவிர 5 பேரும் உயிரிழந்துள்ளனர். ஷெமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், தான் விஷம் சாப்பிட்டதாக அஃபான் கூறியதையடுத்து அவரை உடனடியாக போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இவர் சிகிச்சையில் இருப்பதால் கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.