இது மட்டும் நடந்தால் 'மகளிர் உரிமைத் தொகை' நிறுத்தப்படும் - கனிமொழி எம்.பி பரபர பேச்சு!
பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று திமுக மகளிரணி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் "வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல், மிகவும் முக்கியமான தேர்தல் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
மிகவும் பாடுபட்டு தான் பெண்கள் தங்கள் உரிமைகளை பெற்றுள்ளோம். வரும் தேர்தல் என்பது பெண்களின் உரிமைகளை பாதுகாக்க கூடிய தேர்தல். நம்முடைய அடுத்த தலைமுறை வாழ்க்கை கெட்டுப் போகாமல் இருக்க, அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது.
உரிமைத்தொகை நிறுத்தப்படும்
மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரண வழங்கவில்லை. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்கக்கூடிய ஜிஎஸ்டி வரிப்பாக்கி என்பது 20,000 கோடி உள்ளது. பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும்.
மகளிர் உரிமைத்தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என்று நம்முடைய முதலமைச்சரே சொல்லக்கூடிய அளவிற்குத் தொடர்ந்து தமிழகத்திற்குப் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.
வெள்ள பாதிப்புக்கு நிதி கேட்டாலும் பணம் தருவதில்லை. வரவேண்டிய வரி நிலுவைத் தொகையும் தருவதில்லை. தமிழக அரசின் எந்தத் திட்டத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நிதி கொடுப்பதில்லை" என்று பேசியுள்ளார்.