தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை!
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து கட்டணம்
தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டமைப்பு மற்றும் அமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கடந்த 2018 -ம் ஆண்டு தமிழகத்தில் பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டபோது டீசல் லிட்டருக்கு ரூ.63-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது டீசல் லிட்டருக்கு ரூ. 92-க்கு விற்கப்படுகிறது.
கேரளாவில் ஒரு கிமீ தூரத்துக்கு ஒரு ரூபாய் 10 காசுகளும், கர்நாடகாவில் ஒரு ரூபாயும், ஆந்திராவில் ஒரு ரூபாய் 8 காசுகளும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 காசுகள் மட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
எனவே தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த உத்தரவிட வேண்டும் எனக்கோரப்பட்டிருந்தது. தொடர்ந்து வழக்கு விசாரணையில் உயர்மட்டக்குழு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, ‘‘பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கருத்துகளை கோருவதுடன், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு தமிழக அரசின் உயர் மட்டக்குழு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.