அலங்காநல்லூர் அரங்கில் ஜல்லிக்கட்டு; காளைகள் பங்கேற்கனுமா? பதிவு குறித்த முழு விவரம்!
அலங்காநல்லூர் பிரமாண்ட அரங்கத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரபலமானவை.
இதனைக் காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள். இதனைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்வது எப்படி?
இதற்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானம்" என பெயரிடப்பட்டு, ஜனவரி 24ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதன்பின், ஜனவரி 24ஆம் தேதி முதல் ஜனவரி 28 வரை 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் அங்கு நடைபெற உள்ளது. இந்த அரங்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கலாம்.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி madurai.nic.in என்ற தளத்தில் இன்று (ஜனவரி 19) நண்பகல் 12 மணி முதல் நாளை ஜனவரி 20 நண்பகல் 12 மணி வரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டு காளைகள் உடன் உரிமையாளர், உதவியாளர் என இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. உடற்தகுதிச் சான்றுடன் மாடுபிடி வீரர்களும், காளைகளின் மருத்துவச் சான்றுடன் அதன் உரிமையாளர்களும் பதிவு செய்ய வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் போட்டியாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதனைக் கொண்டே, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.