அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 'அரசியல் நுழைவதால் குளறுபடி' - 2-ம் இடம்பிடித்த வீரர் பரபர புகார்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு
உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வீரர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் என்பவர் 2-வது இடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டு பைக் பரிசு அறிவிக்கப்பட்டது.
ஆனால், நான் தான் அதிக காளைகளை பிடித்தேன் என்றும் முதல் பரிசு அறிவிக்கப்பட்டதில் சதி நடந்துள்ளது' என்றும் கூறிய அபிசித்தர் பரிசை புறக்கணித்து சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "கடந்த ஆண்டு 30 மாடு பிடித்து முதல் பரிசு பெற்றேன். அப்போதும் 26 மாடுகள்தான் பிடித்ததாக அரசியல் செய்தார்கள்.
குளறுபடி
தற்போது அமைச்சர் மூர்த்தியின் தலையீட்டால் எனக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை. நான்தான் அதிகமான காளைகளை பிடித்தேன்.
எனக்கு கார் பரிசு கூட தேவையில்லை, என்னை முதல் இடம் என்று அறிவித்தால் போதும். முதலிடம் அறிவிக்கப்பட்டுள்ள கார்த்திக் சிபாரிசில்தான் போட்டிக்கு வந்துள்ளார். ஜல்லிக்கட்டு வீடியோவை ஆய்வு செய்து யார் உண்மையில் முதலிடம் என்பதை அறிவிக்க வேண்டும். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வேன்.
முதல் பரிசுக்கு அறிவிக்கப்பட்ட கார்த்திக் அமைச்சர் மூர்த்தியின் தொகுதி என்பதால் போட்டி முழுவதும் அவரை முதல் பரிசு பெற வைப்பதற்காக சதி நடந்துள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல் நுழைவதால் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுகிறது. இறுதிச்சுற்றின் போது காளைகளை அடக்க முயன்ற எனக்கு பல்வேறு இடையூறுகளையும் செய்தார்கள்" என்று தெரிவித்தார்.