மாதம் ஒருமுறை துவைக்கப்படும் கம்பளி; வெடித்த சர்ச்சை - ரயில்வே உறுதி!
கம்பளி போர்வைகளை துவைப்பது குறித்த சர்ச்சைக்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
கம்பளி போர்வை
ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வை மற்றும் தலையணைகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில், ஒரு பழுப்பு அல்லது கருப்பு நிற கம்பளி போர்வை,
படுக்கை விரிப்பு, ஒரு தலையணை ஆகியவை அடங்கிய தொகுப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, நாடு முழுவதும் ஓடும் ரயில்களில் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கம்பளி போர்வைகள் பயன்படுத்தப்படுகின்றன.
தொடர்ந்து கம்பளிகள் சுத்தமாக இல்லை என்ற புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது. அதில், படுக்கை விரிப்புகளான வெள்ளைத் துணிகள் ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்குப் பிறகும் துவைக்கப்படும்.
ரயில்வே விளக்கம்
கம்பளிப் போர்வைகள் அதன் எண்ணிக்கைகள், சலவைக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து ஏற்பாடுகளைப் பொறுத்து மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை துவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கம்பளி மற்றும் படுக்கை விரிப்புகளுக்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே இந்த தகவல் விவாதத்துக்கு உள்ளானது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை கம்பளிகள் துவைக்கப்படும். சூடான நாப்தலீன் நீராவி மூலம் கம்பளி போர்வைகள் கிருமி நீக்கம் செய்யப்படும். சில ரயில்களில் UV ரோபோடிக் முறையில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.