மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என கூறினேனா..? சுரேஷ் கோபி விளக்கம்!
மத்திய அமைச்சர் பதவி வேண்டாமென கூறவில்லை என்று பாஜக எம்.பி. சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார்.
சுரேஷ் கோபி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதன்மூலம் அம்மாநிலத்தில் முதல் முறையாக பாஜக கால் பதித்துள்ளது.
இதனையடுத்து மோடி தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக பாஜக எம்.பி. சுரேஷ் கோபி நேற்று பதவியேற்றார். இதனிடையே தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றும், எம்.பி-யாக மட்டுமே இருக்க விரும்புவதாகவும்,
கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதால் பொறுப்பேற்று கொண்டதாகவும் சுரேஷ் கோபி கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் அவ்வாறு கூறவில்லை என சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார்.
தவறான செய்தி
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "மோடி அரசின் அமைச்சர்கள் குழுவிலிருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன.
இது முற்றிலும் தவறானது. அமைச்சரவையில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. மோடி அமைச்சரவையில் கேரள மக்களின் பிரதிநிதியாக நான் இருப்பது எனக்கு பெருமையே. பிரதமர் மோடியின் தலைமையில், கேரளாவிற்கு தேவையான வளர்ச்சி மற்றும் செழுமையை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.