5 கட்ட தேர்தலில் பாஜக இத்தனை இடங்களை தாண்டிவிட்டது - அமித் ஷா பெருமிதம்!
மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நாங்கள் ஒழிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல்
நாடு முழுவதும் 5 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 6 மற்றும் 7-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் உத்தர பிரதேசம் டுமரியாகன்ஜ் தொகுதியில் 6-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜகதாம்பிகா பாலை ஆதரித்து சித்தார்த்நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பிரச்சாரம் செய்தார்.
310 தொகுதிகள்
அப்போது பேசிய அவர் "முதல் 5 கட்ட தேர்தல்களில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது. அகிலேஷ் யாதவுக்கு 4 இடங்கள் கூட கிடைக்காது. ஆனால், பாஜக ஏற்கெனவே 310 என்ற இலக்கை தாண்டிவிட்டது.
எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. ஓட்டு வங்கி அரசியலால் ராகுல் மற்றும் அகிலேஷ் ஆகியோர் கண் மூடித்தனமாக செயல்படுகின்றனர். மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நாங்கள் ஒழிப்போம். அதை எஸ்.சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு திரும்ப அளிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.