தனி நாடாகும் கேரளா? வெளியுறவுத் துறை செயலாளர் நியமனம் - பாஜக எதிர்ப்பு!
கேரள அரசின் வெளியுறவுத் துறை செயலாளராக வாசுகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செயலாளர் நியமனம்
கேரளா அரசின் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை செயலாளரான கே.வாசுகி, வெளியுறவுத் துறை விவகாரங்களையும் கூடுதலாக கவனிப்பார் என அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், டெல்லியில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதகரங்கள் ஆகியவற்றுடன் வாசுகி ஐஏஎஸ் தொடர்பு கொள்வதற்கு டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தின் ஆணையர் உதவுவார்.
மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பொது நிர்வாகம் (அரசியல்) துறை வாசுகி ஐஏஎஸ்-க்கு உதவும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து, கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசின் இந்த அரசாணைக்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பாஜக எதிர்ப்பு
இதுகுறித்து கேரளா மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், மாநில அரசுக்கான வெளியுறவுத் துறை செயலாளரை பினராயி விஜயன் அரசு நியமித்துள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்தை மீறக் கூடியதாகும். வெளியுறவுத் துறை விவகாரங்களை கவனிக்க கேரளாவின் ஆளும் இடதுசாரி அரசுக்கு அதிகாரமே இல்லை.
நமது நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிரானது இந்த நடவடிக்கை. கேரளா என்ற மாநிலத்தை ஒரு தனிநாடாக மாற்றுவதற்கு முதல்வர் பினராயி விஜயன் முயற்சிக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.