பாஜகவிற்கு ஷாக்...தேர்தலில் இருந்து விலகிய போஜ்புரி பாடகர்..!
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த போஜ்புரி நடிகரும் - பாடகருமான பவன் சிங் தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் பட்டியல்
இந்தியாவில் மீண்டும் 3-வது முறையாக ஆட்சியை பிடித்திட முற்பட்டு வரும் பாஜக தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நடிகர் சுரேஷ் கோபி போன்றோரின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
இந்த பட்டியலில் போஜ்புரி நடிகரும் - பாடகருமான பவன் சிங்கிற்கு மேற்குவங்கத்தில் அசன்சோல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
போஜ்புரி சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வளம் வரும் அவர், வெற்றி வேட்பாளராக கட்சி சார்பில் முன்னிறுத்த பட்ட நிலையில், திடீரென அவர் தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக தெரிவித்து பாஜக தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை என அவர், பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பாஜக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
யார் இந்த பவன் சிங்
போஜ்புரி சினிமாவின் பவர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர், சிறந்த பாடகராவும் இருந்து வருகின்றார். பிரபலமானதை போலவே இவர் பல சர்ச்சைகளையும் கொண்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு காதலியான நீலம் சிங் என்பவரை திருமணம் செய்த அடுத்த ஆண்டே நீலம் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 2018-ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்களது திருமண வாழக்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2022-இல் இவர்கள் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பல ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ள போதிலும், அவை பெண்களை இழிவாக சித்தரிக்கும் வகையில் அமைவதாக தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டுகளும் அடுக்கடுக்காக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் போட்டியிடுவதாக இருந்த அசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பிரபல நடிகரான சத்ருகன் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.