பாஜக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு..!

BJP Narendra Modi Government Of India
By Thahir Jun 21, 2022 05:04 PM GMT
Report

பாஜக கூட்டணியின் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தல் 

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வருகிற ஜுலை 18-ம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற ஜுலை 21-ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற்றது.

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பாஜக கூட்டணி வேட்பாளர் தேர்வு 

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு..! | Bjp Announce President Candidate

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, திரௌபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்தார்.

யார் இந்த திரௌபதி முர்மு?

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜுன் 20-ஆம் தேதி பிறந்தவர் திரௌபதி முர்மு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ஒடிசா மாநிலம்,புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லுாரியில் திரௌபதி முர்மு படித்தார்.திருமணம் ஆன நிலையில் இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். மகன்கள் இருவரும் உயிரிழந்தனர்.

அதன் பின் பாஜகவில் இணைந்த திரௌபதி முர்மு ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே 18ம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநராக பதவி வகித்தார்.

ஜார்க்கண்டின் முதல் பெண்ஆளுநர் என்ற பெருமையும் திரௌபதி முர்மு பெற்றார். இந்த நிலையில் தற்போது குடியரசு தலைவர் வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.