பிரதமர் மீது பழி சுமத்துவதா? முதல்வரே பொய் சொல்வதை நிறுத்துங்கள் - அண்ணாமலை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஜெகநாதர் கோவிலில் தொலைந்து போன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், தமிழர்கள் மீது திருட்டுப்பழி சுமத்துவதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதலிடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில் "பொய் சொல்வதையே முழு நேர வேலையாக வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களை அவமதித்து பிரதமர் பேசியதாக மற்றொரு பொய்யை சொல்லியிருக்கிறார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை யாராலும் சந்திக்க முடியாது. தலைமைச் செயலாளர், டிஜிபி, அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் முதலமைச்சரை சந்திக்க தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன்தான் அனுமதி கொடுப்பார். ஒடிசாவின் அரசியல் ஒடிசாவை சாராத ஒருவர் அம்மாநில அரசை இயக்குவதா? என்று பிரதமர் பேசினார்.
கண்டனம்
அது தவறுதானே. அந்தந்த மாநிலத்தின் அரசியல் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரி ஜெகநாதர் கோவில் கருவூலத்தின் சாவி காணாமல் போய்விட்டது. அதை யாரோ திட்டமிட்டு மறைத்துள்ளனர்.
அதற்கு பொறுப்பு யார்?. சொல்லப் போனால் அங்கு முதலமைச்சரே வி.கே.பாண்டியன்தானே. தமிழகத்தில் மண்ணின் மைந்தர் என பேசும் நிலையில், ஒடிசாவில் மட்டும் தனிநியாயமா?. ஒடிசா மக்களுக்கு முன்னுரிமை தராமல் வேறு மாநிலத்தில் இருந்து ஒருவர் உள்ளார். நாங்கள் ஒடிசாவில் பிறந்த ஒருவரை ஒடிசா முதலமைச்சர் ஆக்குவோம்' என பிரதமர் பேசியுள்ளார். இது எப்படி தவறாகும்?. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரதமருக்கு தமிழர்கள் மீது அளவற்ற அன்பு, மதிப்பு இருக்கிறது. அதற்காக தமிழர்களை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சென்று முதலமைச்சராக்க முடியுமா?. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரதமர் மீது பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.