'பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு' - பாஜகவை கலாய்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் பாஜகவின் நிலைமை பரிதாபமாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் 'இண்டியா' கூட்டணியின் மக்களவை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் வேட்பாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின் "எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற வெறியில், பல தியாகங்களால் உருவான இந்திய ஜனநாயகத்தையே மோடி சீரழித்துவிட்டு இருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பாஜகவின் சர்வாதிகாரப் போக்கின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
பரிதாபமாக இருக்கிறது
அதனால்தான் இந்த நாட்டின் நிதியமைச்சர் உட்பட முன்னணி பாஜகவினரும் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குகிறார்கள். இங்கு தமிழ்நாட்டில் அதைவிடப் பரிதாபமாக இருக்கிறது பாஜக. ஒரு காமெடி வரும் ஞாபகம் இருக்கிறதா. “பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு” என்று…
அதுபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் கிடைக்காமல் கவர்னர், சிட்டிங் எம்.எல்.ஏ. என்று அழைத்து நிறுத்தி, செய்தியில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? பா.ஜ.க.வுக்கு இருக்கும் பயமெல்லாம், நோட்டாவைவிடக் கீழே சென்றுவிடாமல் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற முயற்சிதான் நன்றாகத் தெரிகிறது" என்று பேசியுள்ளார்.