பாஜக தலைவர் பதவியை இழந்த அண்ணாமலை - தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
ஆடு, மாடு, விவசாயம் என்று நன்றாக இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அண்ணாமலை ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அண்ணாமலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார்.
கிரிவலப் பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் தியானம் செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆடு மற்றும் மாடுகளுடன் நன்றாக இருக்கேன். விவசாயம் செய்து வருகிறேன். நேரம் கிடைக்கும்போது கோயில் சென்று நிம்மதியாக தியாகம் செய்கிறேன்.
இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கட்சி சொல்லும் பணிகளை ஆங்காங்கே செய்து வருகிறேன். தலைவராக இங்கே செல்ல வேண்டும். அங்கே செல்ல வேண்டும் என்றில்லாமல் நிம்மதியாக வாழ்க்கையில் இருக்கிறேன்.
தற்போதைய நிலை
அதே நேரத்தில் மக்கள் பணியையும் செய்கிறேன். எங்கள் வீட்டின் முன்பு தினசரி வெயிலில் கஷ்டப்படும் 2,000 - 3,000 மக்களுக்கு மோர் கொடுக்கிறேன். இதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது. மக்கள் பணியும் இருக்கும். தேவையில்லாத வேலையில் மாட்டவில்லை.
என்னுடைய பணியை நான் மகிழ்ச்சியாக செய்கிறேன். புத்தகம் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. தந்தையாக என் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடிகிறது. என் பெற்றோர், மனைவி ஆகியோருடன் நேரம் செலவிடுகிறேன். நீண்ட காலத்துக்கு பிறகு என் அம்மா, அப்பாவுடன் அமர்ந்து நிம்மதியாக சாப்பிடுகிறேன்.
இது சிறப்பாக தோன்றுகிறது. இதிலேயே பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு தொண்டனாக நரேந்திர மோடிக்கு பணி செய்ய வேண்டும். என்னுடைய ஆசைப் பெரிது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன். கூட்டணி விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட கருத்து இருந்தாலும், அதை கட்சி தான் முடிவு செய்யும்.
அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஓபிஎஸ் எங்கும் பிரிந்து செல்லவில்லை. அவர் எப்போதும் எங்களுடன் தான் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் ஓபிஎஸ்க்கு எப்போதும் தனி இடம் உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.