நாம் தமிழர் பாஜகவின் பி டீம்; திமுகதான் ஏ டீம் - சீமான் ஆவேசம்
மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சியாக திமுக மாறிவிட்டதாக சீமான் தெரிவித்துள்ளார்.
திமுகதான் ஏ டீம்
தஞ்சாவூரில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பெ.மணியரசன், சீமான், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான், "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என கருணாநிதி முழங்கினார். ஆனால், தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என திமுக மாறிவிட்டது.
மக்கள் ஆட்சியைத் தான், தன்னுடைய மக்கள் ஆட்சியாக மாற்றவிட்டனர் திமுகவினர். நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என கூறியது திமுகதான். ஏனென்றால் பாஜக வின் ஏ டீம் திமுக தான். நீட் தேர்வு, ஜிஎஸ்டியைக் கொண்டு வந்தது காங்கிரஸ். கூட இருந்து கும்மி போட்டது திமுக தான்.
சீமான் ஆவேசம்
சமூக நீதி, மாநில சுயாட்சி, மாநில உரிமை எல்லாம் வெற்று வார்த்தைகள். மாநில சுயாட்சி எனக் கூறி எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்கள் திமுகவினர். கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது. அதை மத்திய அரசு எடுத்தபோது திமுக அமைதியாக இருந்துவிட்டது.
காஷ்மீரில் ராணுவ முகாம் இருந்த பகுதியில் ராணுவ வீரர்களை கொன்றது எப்படி, பின்னர் ஆதார் கார்டு எதற்கு, என்ஐஏ அமைப்பு எதற்கு. எல்லையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்.
பஹல்காமில் 200 கி.மீ. தூரம் எப்படி உள்ளே வந்து தீவிரவாதிகள் சுட்டனர். வந்தவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டிருந்தால் அது பெருமை கொள்ளக்கூடிய விஷயம்" எனத் தெரிவித்துள்ளார்.