ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்; கருணாநிதியே ஆதரவளித்துள்ளார் - அண்ணாமலை!
ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட இரண்டு தீர்மானங்களை கொண்டு வந்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தேவை என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு. 1952-ல் நடந்த முதல் தேர்தலில் 469 உறுப்பினர்கள் தான் இருந்தனர். படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்து 543 ஆக உயர்த்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. நாட்டில் நான்கு முறை நடந்த தேர்தல்களில் 1960-ம் ஆண்டுடன் முடியும் கால கட்டத்தில் இந்திய அரசியலமைப்பு விதி 356-ஐ பயன்படுத்தி காங்கிரஸ் அரசு இரண்டு முறை மாநிலத்தின் ஆட்சியைக் கலைத்தது. இந்திரா காந்தி அதனை முழுமையாக பயன்படுத்த தொடங்கினார். இன்று வரை இந்த விதியை 91 முறைக்கு மேல் பயன்படுத்தியுள்ளோம். இதில் இந்திரா காந்தி மட்டும் 50 முறை பயன்படுத்தி உள்ளார். இந்தியாவை பொறுத்தவரை, அடிப்படையில் முதல் 20 ஆண்டுகள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையைதான் பின்பற்றி வந்தோம்.
காங்கிரஸ் கட்சி 356 விதியை பயன்படுத்திய காரணத்தால் தேர்தல் நடத்தப்படும் சூழல் மாறத் தொடங்கியது. இன்று ஆண்டுக்கு 5 அல்லது 7 தேர்தல் நடத்தப்படுவதை காண முடிகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப் படுகின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் பாகம் 2, 273 பக்கத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளித்திருப்பார். ஆட்சி இயந்திரம் ஸ்தம்பித்து நிற்பது தவிர்க்கப்படும் என குறிப்பிட்டிருப்பார்.
உண்மை நிலையை உணரவேண்டும்
தமிழக முதல்வர், அவரது தந்தை எழுதிய புத்தகத்தை வாசிக்க வேண்டும். திமுக கட்சியின் கொள்கையாக இருந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டை மறந்துவிட்டாரா என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்.
தற்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாததாகும். ஒரு எம்.பி 20 லட்சம் பேருக்கு சேவை செய்ய முடியாது. அதே போல் ஒரு எம்எல்ஏ 1.85 லட்சத்தில் தொடங்கி 5 லட்சம் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. 1976-ல் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடாது என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது. 2001 வரை நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தற்போது 2026 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் சிந்திக்காமல் இரண்டு தீர்மானங்களை கொண்டு வந்துள்ளதாகவே பா.ஜ.க பார்க்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடாது என்பது பா.ஜ.கவின் நிலைபாடு.
எந்த மாநிலத்துக்குகும் பாதிப்பு இல்லாமல் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீலகிரி தொகுதியை தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டார். தொடர்ந்து அவர் அப்பணியை மேற்கொள்வார். 22-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு மேல் குறைந்தபட்ச ஆதரவு விலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கை விடுகின்றனர். இந்திய அரசின் ஆண்டு நிதி நிலை ரூ.45 லட்சம் கோடி. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றினால் ரூ.40 லட்சம் கோடி செலவிட வேண்டியிருக்கும். இது நடைமுறையில் எவ்வாறு சாத்தியப்படும். காங்கிரஸ் கட்சிக்கு இது குறித்து தெரியாதா. அவர்கள் ஆட்சி காலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது என்ன செய்து கொண்டிருந்தனர். அடுத்த இரண்டு மாதங்களுக்கு ராகுல் காந்தி எது வேண்டுமானாலும் பேசுவார். உண்மை நிலையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.