நீங்க ரோடு ராஜாவா..? காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் - எதற்காக?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’நீங்க ரோடு ராஜாவா’ என்ற போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு குறும்படம்
சென்னையின் முக்கிய இடங்களில் கடந்த சில நாட்களாக 'நீங்க ரோடு ராஜாவா?' என்ற பேனர்கள் சாலைகளில் வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏன் போலீசார் வைத்துள்ளனர்? என்று வாகன ஓட்டிகள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் அதற்கான விடை தெரியவந்துள்ளது. சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் இயக்கத்தில் ’நீங்க ரோடு ராஜாவா’ என்ற போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து பேசிய விக்னேஷ் சிவன் "நீங்க ரோடு ராஜாவா என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறேன். பொதுமக்களுக்கு சாலை விதிமுறைகளை கடைபிடிக்க விழிப்புணர்வு வேண்டும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் அவர்கள் கூறினார். அதன்படி பொது மக்களுக்கு புரியும் வகையில் இந்த நீங்க ரோடு ராஜாவா என்ற குறும்படத்தை இயக்கி காட்சிபடுத்தியுள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு அளித்த போக்குவரத்து காவல்துறைக்கு நன்றி" என தெரிவித்தார்.
சாலை விபத்து
இதனை தொடர்ந்து பேசிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் "இந்தியாவிலேயே சாலை விபத்து மூலம் ஏற்படும் மரணத்தை குறைத்துள்ளோம்.
சென்னை மாநகரத்தில் சாலை விபத்து குறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு 566 வழக்கு பதிவு செய்யப்பட்டது, 573 பேர் உயிரிழந்தனர். 2022ல் 500 வழக்கு பதிவு, 508 உயிரிழப்பு ஏற்பட்டது. 2023 ல் 499 வழக்கு பதிவு செய்யபட்டு 504 உயிரிழப்பு இருந்தது. தலைகவசம் அணியாமல் 2021 ல் 279 ஆக இருந்த உயிரிழப்பு 2023 ல் 196 ஆக 38% குறைந்துள்ளது என்றார்,
மேலும் wrong route பயணம் செய்தது தொடர்பாக இந்தாண்டு 60181 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தான் விபத்துக்கள் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு.
A Road Safety initiative from #GreaterChenaniTrafficPolice#roadraja #TrafficAwareness #RoadSafety @SandeepRRathore @R_Sudhakar_Ips pic.twitter.com/QHShMkz8GB
— Road Raja (@roadraja) February 14, 2024
'நீங்க ரோடு ராஜாவா’ என்பதை போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருபவர்களை போட்டோ எடுத்து காவல் துறை இணையதளத்தில் பதிவு செய்யுங்கள் நாங்கள் மூவாயிரம் காவல் துறையினர் இருக்கின்றோம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.