பவானி ஆற்றில் நடக்கும் கொலைகள்; நடிகர் பாக்கியராஜ் வெளியிட்ட Video - காவல்துறை விளக்கம்!
பகீர் தகவல்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் சமீபத்தில் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஒரு ஆறு உள்ளது.
அந்த ஆற்றில் குளிப்பவர்களை ஆற்றுக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் காலை பிடித்து இழுத்து பாறைக்குள் சிக்க வைத்துவிடுவார். அவர்கள் சூழலில் மாட்டி இறந்ததாகத்தான், அந்த கிராமத்தை சேர்ந்த நபரே இறந்தவரின் உறவினர்களிடம் கூறுவார். பின்னர் அந்த நபரே உயிரிழந்தவரின் உடலை மீட்டுக்கொடுத்து உறவினர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்வார். இதை ஒரு தொழிலாக அவர்கள் செய்து வருகிறார்கள். தண்ணீருக்குள் மூச்சைப் பிடிக்கும் தனது திறமையை அவன் தவறாக பயன்படுத்துகிறான்.
நெஞ்சு பொறுக்குதில்லையே#tamil #shortstories #kbr #bhagyaraj pic.twitter.com/6OYNUHOwoy
— K Bhagyaraj (@UngalKBhagyaraj) February 12, 2024
இது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்தப் பகுதிக்கு செல்வோர் கவனமாக இருங்கள் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இது சம்மந்தமான குற்றச் சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் பதிவாகவில்லை. பவானி ஆற்றில் செயற்கையாக மரணங்கள் ஏற்படுத்தபடுவதாக பரவும் வதந்திகள் ஆதாரமற்றது.
காவல்துறை விளக்கம்
மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் உள்ள பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி 20 நபர்கள் இறந்துள்ளனர். அடிக்கடி நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் 10 பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு மேட்டுப்பாளையம் லைஃப் கார்ட்ஸ் என்ற பெயரில் 2023ம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பவானி ஆற்றங்கரையில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு, இதுபோல ஆற்றில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கின்றனர்.
இதன் மூலம் 2023ம் ஆண்டு ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது. அவர்களால் 2023ம் ஆண்டு 914 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். 2022, 2023 பதிவான அனைத்து வழக்குகளிலும், முறையான விசாரணை நடத்தப்பட்டது. அதில் அலட்சியம் அல்லது அதீத நம்பிக்கையே இறப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் 19 ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு, எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலமும் அந்தப் பகுதிகளை கண்காணித்து வருகிறோம். எனவே, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை , உண்மையற்றவை. வதந்தியை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச்செயல் ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.