அந்த ஹிட் படத்தின் ஹீரோ வாய்ப்பை கவினுக்கு விட்டுக்கொடுத்த பிக்பாஸ் பிரதீப்!
டாடா படம் முதலில் பிக்பாஸ் பிரதீப் ஆண்டனிதான் நடிக்க இருந்ததாக அவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ஆண்டனி
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக 'பிக்பாஸ்' உள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது இந்நிகழ்ச்சியின் 7வது சீசன் நடைபெற்று வருகிறது.
இதில் நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றுள்ளார். இவர் 'அருவி' என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து 'வாழ்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் தனது நண்பர் கவினின் 'டாடா' படத்தில் அவரின் நண்பராகவே நடித்திருந்தார். தற்போது பிரதீப்பின் ஆட்டத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. இவருக்கென தனி ரசிகர்களும் உள்ளனர். அண்மையில் பிரதீப்பின் நண்பரான ஆஷிக் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
நண்பர் பேட்டி
அப்போது அவர் பிரதீப்பை பற்றி பேசியதாவது "பிரதீப்தான் 'டாடா' படத்தில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பிரதீப்பும் டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபுவும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரியில் இவர்கள் இருவரும் விஸ்காம் படித்தனர்.
கவின் அதே கல்லூரியில் வேறு ஒரு டிப்பார்ட்மெண்ட் படித்தார். கணேஷ் பாபு முதலில் பிரதீப்பிடம்தான் இந்த படத்தில் நடிப்பதற்காக பேசினார். அப்போது பிரதீப் "என்னை விட இந்த படம் கவினுக்குதான் பொருத்தமாக இருக்கும்.
அவனின் வாழ்க்கை இந்த படத்தின் மூலம் மாறும். அவனுக்குத்தான் அந்த கதாபாத்திரம் சரியாக இருக்கும்' என்று தனது வாய்ப்பை கவினுக்கு கொடுத்தார் பிரதீப். அந்தளவுக்கு அவர்கள் இருவரும் நண்பர்கள்" என்று பிரதீப்பின் நண்பர் ஆஷிக் பேசியுள்ளார்.