'பிறந்தநாள் பரிசுக்கு நன்றி' - இந்திய அணி வென்றதும் தோனி செய்த செயல்!
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா வெற்றி
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 (59) ரன்கள் விளாசினார். இதனையடுத்து 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 17 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு உலகம் முழுவதில் இருந்தும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தோனி வாழ்த்து
அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி வெளியிட்டுள்ள பதிவில் "உலகக் கோப்பை சாம்பியன்கள் 2024. என் இதயத் துடிப்பு அதிகரித்துவிட்டது, அமைதியாக இருந்து,
தன்னம்பிக்கையுடன், நீங்கள் இதற்கு முன் செய்ததையே இப்போது செய்து சிறப்பாக முடித்துள்ளீர்கள். உலகக் கோப்பையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்கு, இந்தியாவிலும் உலகின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இந்தியர்கள் சார்பாக நன்றி... வாழ்த்துக்கள்.
ஹரே... விலைமதிப்பற்ற இந்த பிறந்தநாள் பரிசுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி, கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை முதல்முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.