'நான் பார்த்திருந்தால் இந்தியா தோற்றிருக்கும்' - என்ன சொல்கிறார் அமிதாப் பச்சன்..?
டி20 உலகக்கோப்பையில் இந்திய வெற்றிபெற்றது தொடர்பாக நடிகர் அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளார்.
இந்தயா வெற்றி
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 (59) ரன்கள் விளாசினார். இதனையடுத்து 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 17 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அமிதாப் பச்சன்
இந்நிலையில் இந்திய அணிக்கு உலகம் முழுவதில் இருந்தும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது பிளாகில் எழுதி பதிவிட்ட அவர், இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு அமிதாப் பச்சன் கூறியுள்ள காரணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, "ஒருவழியாக உற்சாகமும், அச்சமும் நிறைந்த இந்த போட்டி நிறைவடைத்துவிட்டது. இந்த போட்டியை நான் டிவியில் பார்க்கவில்லை. நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே பார்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.