ரோஹித் கேப்டன்சியில் மேலும் 2 ஐசிசி கோப்பைகள் - சொன்னது யார் தெரியுமா..?
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து பிசிசிஐ செயலர் ஜெய் ஷா பேசியுள்ளார்.
இந்திய அணி
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி நடத்தும் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட போட்டிகளில் மூவரும் தொடர்ந்து விளையாடவுள்ளனர்.
இந்நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி மற்றும் உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெய் ஷா நம்பிக்கை
அவர் கூறியதாவது "இந்திய அணிக்கான அடுத்த இலக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி. இந்த 2 ஐசிசி தொடர்களிலும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை வெற்றியை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தோம். 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தோம்.
இதயங்களை வென்ற நம்மால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால், டி20 உலகக் கோப்பையை வென்று இதயங்களை மட்டுமல்ல, கோப்பையையும் வெல்வோம் என்று கூறினேன். அது தற்போது நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.