அவங்க போனா என்ன..? இந்தியாவின் எதிர்காலமே இந்த 5 வீரர்கள் தான் - ஆன்ட்டி ஃபிளவர்!
இந்திய அணியின் 5 பேர் மிகச்சிறந்த இடத்திற்கு வருவார்கள் என்று ஜிம்பாப்வே ஜாம்பவான் ஆன்ட்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.
சீனியர்கள் ஓய்வு
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கு பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட போட்டிகளில் மூவரும் தொடர்ந்து விளையாடவுள்ளனர். ஆனால், அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் ரோகித் ஷர்மா , விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்கள் 5 பேர் மிகச்சிறந்த ஒரு இடத்திற்கு வருவார்கள் என்று ஜிம்பாப்வே ஜாம்பவான் ஆன்ட்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது "ஒரு ஐபிஎல் பயிற்சியாளர் என்ற முறையில் நான் சில வீரர்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றேன்.
பயம் வேண்டாம்
ஜெய்ஸ்வால் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் அவர் ஒரு சிறந்த வீரராக இருக்கிறார். விராட் கோலி போல் சுப்மன் கில் விளையாடுகின்றார்.
இதேபோல் அபிஷேக் ஷர்மா எவ்வாறு விளையாடப் போகிறார் என்பதை காண நான் ஆவலுடன் இருக்கிறேன். இதேபோன்று துருவ் ஜூரல் பேட்டிங் எனக்கு பிடித்திருந்தது. ரியான் பராக் போன்ற திறமை வாய்ந்த வீரர் சர்வதேச கிரிக்கெட்டிற்கு நிச்சயம் தேவை. தற்போது இந்திய அணியில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மாற்று வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு மிகவும் பலமாக இருக்கிறது. இதனால் சீனியர்கள் ஓய்வு பெற்று விட்டார்களே என்று பயம் நிச்சயம் தேவையில்லை. ஏனென்றால், இந்தியா தொடர்ந்து சிறந்த வீரர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.