தமிழக நண்பர்களே..! பிரதமர் மோடியை தமிழில் பேசவைத்த AI தொழில்நுட்பம் - உதவிய 'பாஷினி' செயலி!
பிரதமர் மோடியின் இந்தி உரையை தமிழாக்கம் செய்ய ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முயற்சிக்கப்பட்டது.
ஏ.ஐ தொழில்நுட்பம்
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டாவது ஆண்டாக காசி தமிழ்ச் சங்கமம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவரின் இந்தி உரையை தமிழில் மொழிபெயர்க்க ஏ.ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
முதல்முறையாக இந்த முயற்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மேற்கொண்டது. இதில் தழகத்திலிருந்து வந்தவர்களுக்கு ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெட்போன் வசதி வழங்கப்பட்டது.
இந்த ஹெட்போனில் பிரதமர் மோடியின் இந்தி உரை தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்ததைக் கேட்டு பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி "இங்கு ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் மூலமாக புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாஷினி செயலி
ஒரு புதிய துவக்கம் ஏற்பட்டுள்ளது. எனது உரை உங்களுக்கு போய் சேர்வது மேலும் எளிதாகி உள்ளது. தமிழ்நாட்டின் நண்பர்களே இது சரியாக உள்ளதா? இதை நான் முதன்முறையாகப் பயன்படுத்தி உள்ளேன்.
எதிர்காலத்திலும் இதை பயன்படுத்துவேன். இதன் மீது நீங்கள் விளக்கமான கருத்துகளை கூற வேண்டும்” என்றார். இந்த மொழிபெயர்ப்பில் ‘பாஷினி’ எனும் செயலியின் உதவியும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
எந்த ஒரு இந்திய மொழியையும் தங்கள் தாய்மொழியில் கேட்கும் வசதி இந்த செயலியில் உள்ளது. இந்த பாஷினி செயலி மூலம் 22 மொழிகளில் பதிவுகள், 14 மொழிகளில் விவாதங்கள் மற்றும் குரல்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆனாலும் இன்னும் 100% துல்லியமான மொழிபெயர்ப்பு இதில் கிடைக்கவில்லை என கருதப்படுகிறது.