மக்களவை தேர்தல் - களமிறங்கும் எருமை மாடு மேய்க்கும் பி.காம் பட்டதாரி பெண்!
எருமை மாடு மேய்த்து பிரபலமான இளம்பெண் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
பரேலேகா
தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.காம் பட்டதாரியான பரேலேகா. இவர் வேலையில்லா விரக்தியில் எருமை மாடு மேய்க்கும் தொழிலில் இறங்கினார். அப்போது தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பேசி அவர் வெளியிட்டார்.
அதில் "நான் பரேலக்கா. எவ்வளவுதான் படிச்சி, டிகிரி வாங்கினாலும் நமக்கு இந்த தெலுங்கானா வேலை தராது. அதனாலதான் பிகாம் படிச்சிட்டு, என் அம்மா தந்த காசில், 4 எருமை மாடு வாங்கிட்டு, இப்படி மேய்ச்சிட்டு இருக்கேன்.
இங்கு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது" என்று கூறினார். இந்த வீடியோ வைரலாகி இளைஞர்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து பரேலேகா பிரபலமானார்.
மக்களவை தேர்தல்
இதனால் அவர் எருமை மாடு மேய்க்கும் பெண் என தெலுங்கானாவில் செல்லமாக அழைக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த ஆண்டு தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் கோலாப்பூர் தொகுதியில் அவர் சுயேட்சையாக போட்டியிட்டார்.
தெலுங்கானா பல்கலைக்கழக மாணவர்கள் அவருக்காக பிரச்சாரம் செய்தனர். அந்த தேர்தலில் 5,754 வாக்குகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார் பரேலேகா. இந்நிலையில் மக்களவை தேர்தலிலும் அவர் களமிறங்குகிறார். நாகர் கர்னூல் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பரேலேகா போட்டியிடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் நான் வாக்குகள் பெற்றேன். பொதுமக்கள் எனக்கு நேர்மையாக வாக்களித்தார்கள். மக்களவை தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.