விவாகரத்து வாங்கி கொடுங்கள்; மனைவி தினமும் அடிக்கிறார் - ஏரியில் குதித்த நபர்!
மனைவி அடிப்பதால் நபர் ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலிபர் பிடிவாதம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த கொம்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ். இவர் அங்குள்ள ஒரு ஏரியில் திடீரென இறங்கினார். பின்னர் தனது மனைவி அடித்து சித்ரவதை செய்வதாகவும், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று கொடுங்கள் என கத்தியபடி இருந்தார்.
அப்போது நாகேஷை வெளியே வரும்படி அப்பகுதி மக்கள் கூறினர்.ஆனால் அவர் ஏரியில் இருந்து வெளியே வர மறுத்து பிடிவாதம் பிடித்தார். இதனையயடுத்து அப்பகுதி மக்கள் ஏரியில் இறங்கி நாகேஷை வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது "என் மனைவி என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்வதால் கோபம் அடைந்து ஏரியில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்.
வேதனை
குழந்தைகளிடம் பேசக்கூட அனுமதிப்பதில்லை. அப்பா இறந்து விட்டார் என குழந்தைகளிடம் தவறாக கூறுகிறாள்" என்று வேதனை தெரிவித்தார். மேலும், மனைவி அடித்ததால் ஏற்பட்ட காயங்களை காட்டி "தினமும் என்னை அடிக்கிறார்.
என்னால் அடி வாங்க முடியவில்லை. வலி தாங்க முடியவில்லை. மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்" என தெரிவித்தார். அங்கிருந்தவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். நாகேஷ் பேசிய வீடியோவை பார்த்தவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.