அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி உடலில் கல்லை கட்டி ஆற்றில் வீச்சு - என்ன காரணம்?
அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி உடல் ஜலசமாதி செய்யப்பட்டுள்ளது.
பூசாரி மறைவு
உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரபல ராமர் கோவில் உள்ளது. இதன் தலைமை பூசாரியாக மஹந்த் சத்யேந்திர தாஸ்(85) செயல்பட்டு வந்தார். இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மஹந்த் சத்யேந்திர தாஸ் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பாலன்குயினில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜல சமாதி
அங்கு கோவில் நிர்வாகிகள், இந்து அமைப்பினர், பாஜக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின், உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சரயு ஆற்றில் ஜல சமாதி செய்யப்பட்டது. சரயு ஆற்றின் நடுப்பகுதிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு, அங்கு உடலில் கல்லை கட்டி படகில் இருந்து தள்ளிவிடப்பட்டது.
இதுகுறித்து அயோத்தி கோவிலின் புதிய தலைமை பூசாரி பிரதீப் தாஸ் கூறுகையில், ‛‛ராமானந்தி பிரிவில் மரபு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த மரபின்படி மஹாந்த் சத்யேந்திர தாஸின் உடல் சரயு ஆற்றில் ஜலசமாதி செய்யப்பட்டுள்ளது. உடலில் கல்லை கட்டி ஜலசமாதி முறை நிறைவேற்றப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.