காயமடைந்த அக்சர் படேல் - பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாடுவாரா?
அக்சர் படேல் ஓமன் அணிக்கு எதிரான போட்டியின்போது தலையில் காயம் அடைந்துள்ளார்.
அக்சர் படேல்
ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.21) பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன.
இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், ஓமன் அணி உடனான லீக் ஆட்டத்தில், பீல்டிங் செய்த போது அவர் தலை பகுதியில் காயமடைந்தார்.
அதன் பின்னர் களத்தில் இருந்து அக்சர் படேல் பெவிலியன் திரும்பினார். இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய அக்சர், 4 ரன்களை கொடுத்திருந்தார். அதேபோல 13 பந்துகளில் 26 ரன்களை விளாசினார்.
தலையில் காயம்
இதனால் ஒருவேளை, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் விளையாட முடியாமல் போனால், இந்திய அணியின் பேட்டிங் - பவுலிங் சமநிலை பெரிதும் பாதிக்கப்படும். அக்சருக்குப் பதிலாக மாற்று வீரரை வெளியிலிருந்து அவசரமாக அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
காத்திருப்புப் பட்டியலில் (standby list) அக்சரைப் போன்றே ஆல்-ரவுண்டர் திறமை கொண்ட வீரர்களான ரியான் பராக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர். ‘இப்போதுதான் அக்சர் படேலை நான் பார்த்தேன். அவர் இந்த தருணம் நலமாக உள்ளார்.
நாங்கள் பாகிஸ்தான் உடனான ஆட்டத்துக்கு தயாராக உள்ளோம்’ என இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் கூறியுள்ளார்.