இந்தியாதான் அவமானப்பட்டது; பாகிஸ்தான் அல்ல - முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து
இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த சம்பவத்தில் அவமானப்பட்டது இந்தியாதான் என பாக்.முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
ind vs pak
2025 ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து விட்டனர்.
பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்குவதற்காக களத்தில் இருந்த நிலையில் இந்திய வீரர்கள் வெளியேறியது சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரரான ஷாகித் அப்ரிடி, “ஆசிய கோப்பை தொடங்கியபோது, இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக சமூக வலைதளங்களில் புறக்கணிப்பு பிரச்சாரங்கள் நிறைந்திருந்தன.
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் பிசிசிஐ மற்றும் அவர்களுடைய வீரர்கள் எங்களுடைய அணியுடன் கை குலுக்க வேண்டாமென்று கூறியதில் ஆச்சரியமில்லை. என் கருத்துப்படி, இதில் விளையாட்டு மனப்பான்மை இல்லை.
பாக்.முன்னாள் வீரர் கருத்து
அவர்கள் மீண்டும் உலகின் முன் அவமானப்பட்டுள்ளார்கள். இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு சரியாக இருந்தது என்று நினைக்கிறேன். எங்கள் கிரிக்கெட் வாரிய தலைவர் சரியான முடிவு எடுத்துள்ளார்.
வீரர்கள் விளையாட்டின் சிறந்த தூதர்களாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறியிருக்கிறேன். நான் இங்கே இந்திய வீரர்களை குறை கூற விரும்பவில்லை. அவர்களுக்கு மேலிருந்து உத்தரவு வந்தது.
அதே சூர்யகுமார் யாதவ், கேப்டன்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் சல்மான் ஆகாவுடனும் மொஹ்சின் நக்வியுடனும் கை குலுக்கினார்.
ஆனால் இப்போது பார்வையாளர்கள் முன்னிலையில் சமூக வலைதளத்தின் அழுத்தத்தை அவர்களால் கையாள முடியவில்லை. இந்திய வீரர்கள் இப்போது உலகின் முன் அவமானமாகி விட்டனர்“ என தெரிவித்துள்ளார்.