ஓபிஎஸ்ஸின் கோரிக்கை மனு நிராகரிப்பு.. தலைமை தாங்குவாரா ஈபிஎஸ்!
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
ஓபிஎஸ்
எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் அணியினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆவடி காவல் ஆணையருக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு
அப்போது பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவல் இணை ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு கட்சியின் நிர்வாகிகளால் கூட்டத்தில் முடிவு செய்யப்படாத பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கட்சி தொண்டர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது.
மனு நிராகரிப்பு
இதனைத் தொடர்ந்து 18ம் தேதி அதே தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன.
மேலும், நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம் என்று கட்சி இணை ஒருங்கிணைப்பாளருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் திருமண மண்டப மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளபடியாலும், பென்ஜமின் பாதுகாப்பு கோரி இருப்பது தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும்,
கட்சிக்கு எதிரான நடவடிக்கை என்பதாலும், கூட்டத்திற்கான அனுமதி மறுக்க வேண்டுமென்று தங்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஆவடி காவல்துறையினர் நிராகரித்துள்ளனர்.
தனி நபரின் உள்அரங்கத்தில் கூட்டத்தில் நடப்பதால் தடுத்து நிறுத்த முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் அராஜகப்போக்கு..தருமம் மறுபடியும் வெல்லும் - ஓபிஎஸ் கண்டனம்!