ஓபிஎஸ் உண்மையைத்தான் கூறியிருக்கிறார் - சசிகலா பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திடம் 2 நாட்களாக விசாரணையை நடத்தியது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது -
ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. அன்றும், இன்றும் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ எந்தவித சதித் திட்டமும் தீட்டவில்லை.
சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கப்பட்டது என தனக்கு தெரியாது. மருத்துவமனையில் ஜெயலலிதா நன்றாக இருப்பதாக சசிகலா ஒருசில முறை தன்னிடம் சொன்னார்.
தொடர்ந்து அவர் நன்றாக இருப்பதை பொதுவெளியில் கூறாமல் சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன். அரசுப்பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் சொல்லவில்லை.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் இன்று செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது -
எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. ஓ.பன்னீர்செல்வம் உண்மையை கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா மரணம் குறித்து, உண்மை என்னவென்று தெரிய வேண்டும். பொதுமக்களுக்கும் தெரிய வேண்டிய விஷயம்தான். எனவே ஆணையம் விசாரிப்பது நல்லதுதான். நான் ஆரம்பித்திலிருந்து கூறிவந்தேன்.
அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் என் மீது சந்தேகப்பட்டதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அரசியலில் என்னைப் பிடிக்காதவர்கள் கூட இதை பரப்பி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.