கில் வேண்டாம்; இவரிடம் கேப்டன் பொறுப்பை கொடுங்கள் - அஸ்வின் அதிரடி
டெஸ்ட் கேப்டன் பொறுப்பு குறித்து அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கேப்டன்?
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகியதோடு, விராட் கோலியும் ஓய்வை அறிவித்துள்ளார். இந்தியா 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ஜஸ்பிரித் பும்ரா தகுதியானவர் என்றாலும், அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது.
அஸ்வின் கருத்து
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், ”ரவீந்திர ஜடேஜா தான் இந்திய அணியின் மிகவும் மூத்த வீரர் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே, அவர் கேப்டன்ஷிப் பொறுப்பு சம்பந்தமான விவாதங்களில் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய வீரரைக் கேப்டனாக வளர்க்க நினைத்தால் அவரை 2 வருடங்கள் துணை கேப்டனாக நியமனம் செய்யுங்கள்.
ஜடேஜா கேப்டன்ஷிப் வேலையை செய்வார். ஜடேஜா தலைமையில் அவர் துணைக் கேப்டனாக செயல்படலாம். இங்கே நான் ஜடேஜாவை வைல்ட் கார்டாக போடுகிறேன். குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதிப் பெறும் என்று நம்புகிறேன்.
கில் அதில் விளையாடிய கவுரவத்தை பெற்றால் அடுத்தக் கேப்டனாக வருவது எளிதாக இருக்கும். ஆனால், ஐ.பி.எல் தொடரில் ஒரு வருடம் சிறப்பாக விளையாடுவதை வைத்துக்கொண்டு கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்வது எளிதல்ல. ஏனெனில், டெஸ்ட் கேப்டன் முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.