11 பேர் பலியான அரியலூர் வெடிவிபத்து; காரணம் அந்த 3 பெண்களா? வெளியான ஷாக் தகவல்!
11 பேர் உயிரிழந்த அரியலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
வெடி விபத்து
அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இதில் படுகாயமடைந்த 13 அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் ஆலையை நடத்தி வந்த அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கீழப்பழுவூர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
என்ன காரணம்?
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் "தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் புதிதாக வேலைக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு அங்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என தெரியாமல் 'அமோனியம் பாஸ்பேட்' இருந்த பெட்டியை வேகமாக இழுத்ததாக தெரிகிறது.
அப்போதுதான் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை வெடிவிபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய, அங்கு பணிபுரிந்த விக்னேஷ்வரன் என்பவரும் உறுதி செய்துள்ளார். மேலும் அங்கு பாதுகாப்பு இல்லாமல் குப்பைகளை போல வெடி மருந்துகளை குவித்து வைத்திருந்ததும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.