Cement city'யான அரியலூரில் பிறந்து சரித்திரத்தில் பெயரை cement செய்தவர்களை குறித்து தெரியுமா..?
அரியலூரில் பிறந்து அகிலம் போற்றும் புகழ் பெற்றவர்களை குறித்து தற்போது காணலாம்.
தொல் திருமாவளவன்
தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவனின் சொந்த மாவட்டம் அரியலூராகும். 1962-ஆம் ஆண்டு பிறந்த திருமாவளவன், தடய அறிவியல் துறையில் தான் செய்து வந்த பணியை ராஜினாமா செய்து விட்டு, 1999-ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் இறங்கினார்.
2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறை சட்டமன்றத்திற்குள் நுழைந்த அவர், அதனை 2009-ஆம் ஆண்டு மற்றும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தற்போதும் தமிழகத்தின் கம்பீர குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்து வருகின்றார்.
எஸ்.எஸ்.சிவசங்கர்
தற்போதைய தமிழகத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சரான எஸ்.எஸ்.சிவசங்கரின் பிறந்த ஊரான தேவனூர் அரியலூர் மாவட்டத்தில் தான் உள்ளது. 1969-ஆம் ஆண்டு பிறந்த இவர், தனியார் துறையில் பணியாற்றி வந்த தனது பணியை துறந்து 1993-ஆம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபட துவங்கினார்.
மாவட்ட ஊராட்சி தலைவர், கட்சி மாவட்ட செயலாளர் போன்ற பதவிகளை வகித்த அவர் 2006-ஆம் ஆண்டு முதல் முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தற்போது 3-வது முறையாக தேர்வாகி இருக்கின்றார்.
காடுவெட்டி குரு
பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் சொந்த மாவட்டம் அரியலூராகும். 1986-ஆம் ஆண்டு திமுகவின் கிளை செயலாளராக இருந்த இவர், பின்னர் பாமகவில் இணைந்து அக்கட்சியின் மிக முக்கிய தலைவராக மாறினார்.
தன் சொந்த மாவட்டமான அரியலூரில் இரட்டைக்குவளை முறையை ஒழித்தவர் என்ற பெருமை பெற்ற காடுவெட்டி குரு, 2001 மற்றும் 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
ந.வளர்மதி
சரித்திர சாதனை படைத்த சந்திரயான் 3 பயணத்தின் கவுண்ட்-டவுனை வாசித்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரரான ந.வளர்மதி பிறந்தது அரியலூர் மாவட்டத்தில் தான். 1959-ஆம் ஆண்டு அரியலூரில் பிறந்த வளர்மதி, 1984 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் இணைந்து பணியாற்றி வந்தார்.
2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "வீவாணி படிமமாகச் செயற்கைக்கோள்" திட்ட இயக்குநராகப் பணியாற்றிய அவர், ஆதித்தியா எல் 1 விண்கலத்தை ஏவுதலுக்குக் குரல் கொடுத்தவர் ஆவார். இதே மாதம் செப்டம்பர் 2-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக வளர்மதி இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம் கார்த்திக்
இந்தியாவின் ஹாக்கி அணியின் முன்கள ஆட்டக்காரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் செல்வம் கார்த்திக் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவரே. கடைசியாக நடைபெற்ற 2022-ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையில் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணியிலும் முக்கிய வீரராக செல்வம் கார்த்திக் பங்கேற்றார்.
2018 ஆம் ஆண்டில், இளையோர் தேசிய வெற்றியாளர் போட்டியில் தமிழ்நாட்டிற்காக விளையாடுகையில் தொடர்ச்சியான சிறந்த செயல்பாட்டிற்குப் பிறகு கார்த்தி 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய தேசிய அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த 13 வருடங்களில் மாரீசுவரன் சக்திவேலுடன் இணைந்து, தமிழ்நாட்டிலிருந்து இந்திய தேசிய அணிக்குத் தேர்வான முதல் நபர் கார்த்தி செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.