தூள் கிளப்பும் த.வெ.க. மாநாடு - 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்.. விஜய் அதிரடி!
த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். அதன் பிறகு கட்சிக்கான கொடியைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தி கட்சிக் பாடலையும் வெளியிட்ட அவர் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து த.வெ.க.வின் முதல் மாநாட்டிற்கான இடம் நீண்ட இழுபறிக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டது .அதன்படி விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.மாநாட்டிற்கான பந்தக் கால் பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக த.வெ.க. மாநாடு தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய 27 குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழகம் நேற்று (12.10.2024) உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் த.வெ.க. கட்சியின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
234 சட்டமன்றத் தொகுதி
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தபடி, கட்சியின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா, வருகிற 27ஆம் தேதி (27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யின் ஆணைப்படி, சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட,
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.