விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பா? உண்மை இதுதான் - த.வெ.க விளக்கம்!
விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி மறுத்ததா என்பதற்கு த.வெ.க விளக்கமளித்துள்ளது.
அனுமதி மறுப்பா?
கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், கட்சியின் முதல் மாநாட்டைப் பிரமாண்டமாக நடத்தத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அலங்கரிக்கப்பட்ட கட்சியாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக கட்சியின் சின்னம் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை
இம்மாதம் 23-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதாகவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு ஏற்கனவே காவல்துறையிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர். இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
த.வெ.க விளக்கம்
ஆனால் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாட்கள் இல்லை என்பதால் மாநாடு தேதி தள்ளிப்போனது. கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில்,
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த சமயத்தில் த.வெ.க. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் பரவியது.
இது தொடர்பாக த.வெ.க. தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி , மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என வெளிவரும் செய்தி தவறானது. மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
தேதி மாற்றம் குறித்தும் காவல்துறையிடம் மனு மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது; காவல்துறை சார்பில் வழங்கபட்ட 33 நிபந்தனைகளுக்கும் கட்சி சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.