எம்.பி சீட்டுக்காக இப்படி வித்துட்டாரே - கமல்ஹாசனை விளாசிய அண்ணாமலை!
எம்.பி சீட்டுக்காக கமல்ஹாசன் தனது ஆன்மாவை விற்று விட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கமல் ஆதரவு
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கரூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கரூர் சம்பவத்தில் காவல்துறையை குற்றம் சொல்ல முடியாது. தமிழக அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் மனிதாபிமானத்தை தான் பார்க்க வேண்டும் அரசியல் செய்யக் கூடாது. அரசியல் செய்வதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. விரைவாக வந்து மக்களை காப்பாற்றிய செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது செந்தில் பாலாஜியின் ஊர். அவர் மக்கள். அவர் உடனே வராமல் யார் வருவார்'' என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில் இந்த பேச்சுக்கு மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ''ஒரே ஒரு எம்.பி சீட்டுக்காக கமல்ஹாசன் நீண்ட காலத்திற்கு முன்பு தனது ஆன்மாவை விற்றுவிட்டார்.
அதன்பிறகு அவர் என்ன பேசினாலும், தமிழக மக்கள் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவோ அல்லது அவரை பெரிதாக எடுத்துக்கொள்ளவோ போவதில்லை. கரூர் விவகாரத்தில் அரசு நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என கமல்ஹாசன் சொல்கிறார். இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகர், ஆனால் அரசியலில், அவர் என்ன சொன்னாலும் அது ஒருதலைப்பட்சமானது. கரூர் போன்ற ஒரு பிரச்சினையில் கூட, அவர் திமுகவுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.