வேட்டி, போர்வை கொடுப்பது நல்லாவா இருக்கிறது..? இதெல்லாம் பழைய அரசியல் - அண்ணாமலை!!
வேளாங்கண்ணியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வருடா வருடம் கனமழைக்கு தண்ணீர் தேங்கும் நிலை ஏன் என தமிழக மக்கள் கேட்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை பேட்டி
என் மண் என் மக்கள் பாதயாத்திரையை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாகை மாவட்டம் சென்றுள்ளார். கனமழை காரணமாக நடைப்பயணத்தை வரும் 6-ஆம் தேதி வரை அண்ணாமலை ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில், பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படும் நடைபாதையை வரும் 6 ஆம் தேதியில் இருந்து நடைபயணத்தை கடலூரில் இருந்து துவங்க உள்ளேன் என கூறினார்.
சென்னை மழையில் கீழ்நிலை ஊழியர்கள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை கடுமையாக உழைக்கின்றனர் என்பதை குறிப்பிட்டு, இரவு நேரத்தில் பிரச்னை என்றாலும் மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் பணியாற்றுகின்றனர் என்ற அண்ணாமலை, வருடா வருடம் கனமழைக்கு தண்ணீர் தேங்கும் நிலை ஏன் என தமிழக மக்கள் கேட்க வேண்டும் என பேசினார்.
கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளோம் - மழை வெள்ள பாதிப்பால் தனியார் கம்பெனிகள் சென்னைக்கு வர யோசித்து ஹைதராபாத் செல்கின்றனர் என்ற அவர், இந்த நிலையை மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். என குறிப்பிட்டு, இதில் தான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
திரும்ப திரும்ப அதேமாதிரி பழைய அரசியல், பழைய பஞ்சாயத்து செய்து மழை வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல்வாதிகள் வேட்டி போர்வை கொடுப்பது நன்றாகவா இருக்கிறது? என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, வல்லுநர்களை அழைத்துவந்து தீர்வை கண்டுபிடித்து, ஊழல் இல்லாத திட்டங்களை சென்னை மக்களுக்காக செய்ய வேண்டும் என்றார்.