ஆவின் சர்ச்சை.. தமிழகத்தின் சாபக்கேடு, கம்பி காட்டும் கதை - விளாசிய அண்ணாமலை!
அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்து பேசியுள்ளார்.
ஆவின்
ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பாக்கெட் பால் 4.5 சதவீத கொழுப்புச் சத்து கொண்டது. இந்த பால் பாக்கெட் விநியோகத்தை நவம்பர் 25-ம் தேதியுடன் நிறுத்தவும். இதற்கு பதிலாக, பச்சை நில பாக்கெட் பாலைவிட 1 சதவீத கொழுப்புச் சத்து குறைவான ஊதா நிற பாக்கெட் விற்பனையை அதிகரிக்கப் போவதாக ஆவின் அறிவித்தது.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். பிறகு அதில் உண்மை தன்மை இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் சிலர் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
அண்ணாமலை
இந்நிலையில், அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும் குற்றச்சாட்டை 48 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும், இல்லாவிட்டால் தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, அமைச்சர் பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு இன்று பதில் அளித்துள்ள மனோ தங்கராஜ், மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் பரம்பரை அல்ல, பெரியாரின் பேரன்கள் என்று கூறியதுடன், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இதற்கு அண்ணாமலை, "தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.
ஏற்கனவே, பிரதமர் மோடியை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை. ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன்.
அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு" என்று தெரிவித்துள்ளார்.