ரூ.5500 கோடி கோவில் சொத்து.. நிர்மலா சீதாராமன் மக்களை ஏமாற்ற போடும் பகல் வேஷம் - ஸ்டாலின் காட்டம்!
முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் குறித்து பேசியுள்ளார்.
திருமண விழா
சென்னை மயிலாப்பூரில்ம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நண்பர் திருமங்கலம் கோபாலின் இல்ல திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதில் அவர், "தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு தான் சுயமரியாதை திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது. முதன் முதலில் அண்ணா தான் சீர்திருத்த திருமணம் செல்லும் என்று அங்கீகரித்தார்.
இங்கு நடைபெறும் திருமணம் சாதி மறுப்பு மற்றும் காதல் திருமணமாகத் தான் இருக்கும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதிக்கு பாதுகாவலராக இருந்தவர் கோபால், அவரின் நிழல் போல தொடர்ந்தவர் கோபால்" என்று கூறினார்.
கோவில் சொத்து
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "திமுக இளைஞர் அணியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் தேவையில்லாத பிரசாரங்களை செய்து வருகின்றனர். ஊடகங்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொய் செய்திகளை பரப்பி மக்களை குழப்புகின்றனர்.
அண்ணாமலை போன்றவர்கள் குழப்பினால் கூட நான் கவலைப்பட மாட்டேன், ஆனால், மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவர், அதுவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவில் சொத்துகளை தாம் கொள்ளை அடிக்கிறோம் என்று கூறுகிறார். அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமாக பதில் அளித்துவிட்டார் என்பதை சுட்டிக்காட்டினார்.
இதுவரை ரூ.5,500 கோடி மதிப்பிலான கோயில் இடங்கள், சொத்துக்கள் மீட்கப்பட்டடுள்ளது. இது நடந்தது திமுக ஆட்சியில் தான், திராவிட மாடல் ஆட்சியில் தான். எனவே, அவர்களுக்கு பக்தி என்று இருந்திருந்தால் திமுக ஆட்சியை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால், சிலருக்கு பக்தி இல்லை, மக்களை ஏமாற்ற பகல் வேஷம் போடுகிறார்கள் " என்று கூறியுள்ளார்.