தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
முதல்வர் இன்று நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
கள ஆய்வு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம், வளர்ச்சித் திட்ட பணிகள், அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
முதலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் மறைமலை நகரில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்ற கட்டடத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு இன்றும் நாளையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு கூட்டம்
இந்நிலையில், முதல் நாளில், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அதில் சட்டம் ஒழுங்கு, குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இரண்டாவது நாளில் ஆட்சியர்களுடன் அடிப்படை வசதிகள், வேளாண், நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட 28 துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். மேலும், மறைமலை நகரில் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, அப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு டிரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.