மாமியார் வீட்டிற்கு அரசு பஸ்ஸை ஓட்டிச் சென்ற நபர் - மனைவியை பார்க்க இப்படியா?
அரசு பேருந்தை லாரி ஓட்டுநர் ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பேருந்து
ஆந்திரா, வேங்கடபூர் பகுதியைச் சேர்ந்தவர் துர்க்கையா. லாரி ஓட்டுநராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவில் தனது மனைவியைக் காணச் சென்றுள்ளார்.
அப்போது, நள்ளிரவில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் விரக்தியடைந்துள்ளார். எனவே, நந்திகோட்கூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தில் ஏறி அதனை ஓட்டிச் சென்றுள்ளார்.
லாரி ஓட்டுநர் கைது
தொடர்ந்து, பேருந்து மாயாமானது குறித்த தகவலறிந்த பணிமனை அதிகாரிகள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முச்சுமர்ரி பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
உடனடியாக அங்குசென்று பேருந்தை மீட்டு, லாரி ஓட்டுநர் துர்க்கையாவை கைது செய்துள்ளனர்.
அதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தன்னிடம் செலவுக்கு பணம் இல்லாததால் மனைவியை காண வேறு வழியின்றி அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.