டோல்கேட்ல பணம் கட்ட சொல்லுவியா? - பம்பரில் தொங்க விடப்பட்ட ஊழியருக்கு நேர்ந்த கதி
ஆந்திராவில் டோல்கேட்டில் பணம் செலுத்த சொன்ன ஊழியரை லாரி டிரைவர் பம்பரில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச்சாவடிகள் அமைத்துள்ள நிலையில் இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணமாக குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இத்தகைய டோல்கேட்டுகளை அடித்து நொறுக்க கோரிக்கை வைக்கப்படும் வேளையில் ஆங்காங்கே டோல்கேட்டுகளை அடித்து நொறுக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் குத்தி பகுதியில் உள்ள டோல்கேட் ஒன்றினை லாரி ஓட்டுநர் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அமத்தகாடு வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்த லாரியை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் ஓட்டியுள்ளார். டோல்கேட்டை கடக்க முயன்றபோது அவர் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளார்.
இதனை கண்டுபிடித்த டோல்கேட் ஊழியரான சீனிவாசலு என்பவர் லாரியின் முன்னே சென்று நிறுத்தியுள்ளார். ஆனால் ஓட்டுநர் லாரியை நிறுத்தாததால், அதன் பம்பர் மீது ஏறி சீனிவாசலு லாரியை நிறுத்த சொல்லியுள்ளார்.
இதனால் கடுப்பான அந்த லாரி ஓட்டுநர் வாகனத்தின் முன்னால் ஊழியர் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் லாரியை வேகமாக இயக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக டோல்கேட் ஊழியர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் லாரியை பின்தொடர்ந்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் டோல்கேட்டில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் லாரியை மடக்கி ஊழியரை மீட்டதோடு ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.