திருப்பதி லட்டு விவகாரத்தில் அலறும் அமுல் நிறுவனம்- இதுதான் காரணமா?
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒருபோதும் நெய் விநியோகம் செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பதி
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான புகார் ஆந்திர அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் தான் இந்த முறைகேடுகள் நடந்ததாக முதலமைச்சர் சந்திரபாபு குற்றம்சாட்டி இருந்தார்.
இதனையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்கப் பெற்ற ஆய்வறிக்கையைத் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் பாமாயில் எண்ணெய் கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒருபோதும் நெய் விநியோகம் செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமுல் நிறுவனம்
இது குறித்து அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற எங்களின் அதிநவீன உற்பத்தி நிலையங்களில் அமுல் நெய் பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
அமுல் நெய் உயர்தர தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எங்கள் பால் பண்ணைகளில் பெறப்படும் பால் கடுமையான முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. FSSAI வழிகாட்டுதல் படி கலப்படம் கண்டறிதல் உட்படக் கடுமையான தரச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக திருப்பதி தேவஸ்தானம் கர்நாடக அரசு நிறுவனமான நந்தினியிடம் இருந்து நெய் வாங்கியதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.