இதை ஏன் அரசியலாக்குகிறீர்கள்? எல்லாம் வழக்கம்தான் - திருமாவளவன் ஆதங்கம்!
இனிப்புப் பொருட்களில் விலங்குக் கொழுப்பு பயன்படுத்துவது வழக்கம் தான் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியப்போது, மதுரையில் முதல் முதலாக திருமாவளவன் கொடி ஏற்றினார். 20 அடியில் இருந்து 62 அடியாக உயர்த்தப்பட்ட கம்பத்திற்கு அனுமதி பெறவில்லை என அண்மையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கம்பத்தை அகற்றியது சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு, கொடி கம்பத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய கம்பத்தில் திருமாவளவன் கொடி ஏற்றி வைத்தார்.
லட்டு விவகாரம்
இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மாநில கட்சியாக மாறியபோதும், கொடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை விசிக சந்தித்து வருவதாக கூறினார்.
கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என வெள்ளி விழா மாநாட்டில் தாம் பேசியதையும் திருமாவளவன் நினைவுகூர்ந்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்தப்போது திருப்பதி லட்டு விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், பெரும்பாலான இனிப்புப் பொருட்களில் விலங்குக் கொழுப்பு பயன்படுத்துவது வழக்கம் தான். இதில், திருப்பதி லட்டு விவகாரம் அரசியலாக்கப்படுவதாக தெரிவித்தார்.