அயோத்தியை தொடர்ந்து பீகாரில் பிரமாண்ட சீதா கோயில்...அமித் ஷாவின் அதிரடி வாக்குறுதி!
பாரதிய ஜனதா கட்சி சீதா தேவிக்கு கோயில் கட்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சீதா கோயில்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதற்கான வாக்கு சேகரிப்பில் அனைத்து கட்சிகளும் முக்கிய தலைவர்களும் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வாக்கு வங்கியைக் கண்டு பாஜக பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிய பிரதமர் மோடிக்கு, சீதா தேவி பிறந்த இடத்தில் பெரிய நினைவிடம் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது.
அமித் ஷா வாக்குறுதி
ராமர் கோயிலில் இருந்து ஒதுங்கிக்கொண்டவர்களால் இதை செய்ய முடியாது. ஆனால், பீகாரின் சீதாமர்ஹியில் சீதாதேவிக்கு ஒரு கோயிலை கட்ட முடியும் என்றால், அது நரேந்திர மோடியால் மட்டும்தான் முடியும்” என்று பேசியுள்ளார்.
இந்து புராணங்களின்படி, ராமரின் மனைவியான சீதை, அரசர் ஜனகர் சீதாமர்ஹிக்கு அருகில் உள்ள வயலில் உழுது கொண்டிருந்தபோது, ஒரு மண் பானையிலிருந்து உயிர்பெற்றார் என நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியில் தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், தற்போது சீதா தேவி கோயிலுக்கான வாக்குறுதியை அளித்துள்ளார் அமித் ஷா.