அமெரிக்கா to இந்தியா.. கடந்த 15 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது புதிதல்ல என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் முதல் நாளில் கையெழுத்திட்ட உத்தரவுகளில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட உத்தரவுகள் முக்கியமானவை. அதன்படி,அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கூறி இந்தியர்களை நாடு கடத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க ராணுவ விமானம் மூலம் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள 104 இந்தியர்களைத் திருப்பி அனுப்பினர். அவர்களில் 30 பேர் பஞ்சாபிலிருந்தும், தலா 33 பேர் ஹரியானா மற்றும் குஜராத்திலிருந்தும், மூன்று பேர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்தும், இரண்டு பேர் சண்டிகரிலிருந்தும் வந்தவர்கள்.
மேலும் கைவிலங்கு, கால்களில் சங்கிலி விலங்கு அணிந்து அழைத்து வரப்பட்டனர். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் புதிதல்ல என்று கூறினார்.
அமெரிக்கா
கடந்த 15 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் தரவுகளை வெளியிட்டார். 2009 முதல் மொத்தம் 15,756 சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார். 2009ல் 734 பேர், 2010ல் 799 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
2011ல் 599 பேர், 2012ல் 530 பேர், 2013ல் 515 பேர், 2014ல் 591 பேர், 2015ல் 708 பேர், 2016ல் 1303 பேர், 2017ல் 1024 பேர், 2018ல் 1180 பேர், 2019ல் 2042 பேர், 2020ல் 1889 பேர், 2021ல் 805 பேர், 2022ல் 862 பேர், 2023ல் 617 பேர், 2024ல் 1368 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
2025ல் 104 பேர் என்று 2009ல் இருந்து இன்று வரை 15,668 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.