குடியுரிமை திருத்தச் சட்டம் கவலையளிக்கிறது; இந்தியாவை கண்காணித்து தான் வருகிறோம் - அமெரிக்க கருத்து!
இந்தியாவில் சி.ஏ.ஏ சட்டம் வந்தது கவலையளிக்கிறது எனவும், தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அமெரிக்க கருத்து தெரிவித்துள்ளது.
சிஏஏ அமல்
கடந்த 11-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, மேற்கு வங்கம்,கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இதற்கிடையில், சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் அதன் மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக கருதப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 7-வது அட்டவணையின்படி ராணுவம், வெளியுறவு, வெளிநாட்டினர் உள்ளிட்ட 97 பிரிவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அமெரிக்க கருத்து
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லரிடம் செய்தியாளர்கள் இந்த சட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ”இந்தியாவில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளா குடியுரிமை திருத்தச் சட்டம் கவலையளிக்கிறது.
அமெரிக்கா தொடர்ந்து இந்த சட்டம் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து கண்காணித்து வருகிறது. மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயக கோட்பாடுகள்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டமானது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகை தரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
இஸ்லாமியர்கள்அல்லாது, இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்த சட்டம் வாயிலாக குடியுரிமை பெறுவார்கள். இதில் இஸ்லாமியர்கள் இணைக்கப்படாததே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடிப்பதற்கான காரணமாக இருக்கிறது.