குடியுரிமை திருத்த சட்டம் - மாநில அரசுகளுக்கு இதில் எந்த அதிகாரமும் இல்லை!
குடியுரிமை திருத்த சட்ட அதிகாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிஏஏ அமல்
கடந்த 11-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, மேற்கு வங்கம்,கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இதற்கிடையில், சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் அதன் மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக கருதப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 7-வது அட்டவணையின்படி ராணுவம், வெளியுறவு, வெளிநாட்டினர் உள்ளிட்ட 97 பிரிவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மாநில அரசு அதிகாரம்
இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்தல் மற்றும் அதன் மீது இறுதிமுடிவு எடுத்தல் ஆகிய பணிகளை மாநிலஅரசு பிரதிநிதியின் ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசு குழுவால் முடித்துவிட முடியும்.
தற்போது, குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் https://indiancitizenshiponline.nic.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
சிஏஏ சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.